×

காரைக்காலில் தெருக்களில் சுற்றி திரியும் நாய்கள் நாய் கடியால் ஓராண்டில் 1000 பேர் சிகிச்சை

*கண்டுகொள்ளாத கால்நடைத்துறை

காரைக்கால் : நாய்க்கடியால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 55,000 பேர் இறப்பதாக, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் சமீபத்தில் நாய் கடியால் இறப்பு மற்றும் காயமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதாக இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றனர். இது ஒரு புறம் இருக்க நாட்டிலே சிறிய மாநிலமான புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கடந்த சில ஆண்டுளில் நாய்க்கடியால் பலத்த காயம் அடைந்து 75 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில் தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினம் தோறும் ஐந்து தொகுதிகளிலும் குறைந்தபட்சம் 10க்கும் மேற்பட்ட நாய் கடியால் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சாலைகளில் நடந்து செல்லும் முதியவர்கள், தெருக்களில் விளையாடும் குழந்தைகள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகளை குறிவைத்து கூட்டமாக பின்தொடர்ந்து செல்லும் தெரு நாய்கள் கடித்து குதறுகின்றனர். இந்த தெருநாய்களுக்கு பயந்து இரு சக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து விடுகின்றன.

வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள் கட்டுபாட்டுடனும், உரிய முறையில் பாராமரிக்கப்பட்டும் வளர்ப்பதால் பெரிய அளவில் சமூக தொல்லைகள் இல்லை. ஆனால் தெரு நாய்கள் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாததால், அங்கேயும் இங்கேயும் மனம் போல் சுற்றித் திரிகின்றன. உணவுக்கு மாற்று இடம் பிரவேசத்தின் போதும் மற்ற நாய்களிடம் கடிபட்டும் சண்டையிட்டும் வாழ்கின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக தெருக்களில் வலம் வருகின்றன.

அதிகாலை நடைபயிற்சி, ஓட்டப்பயிற்சி மேற்கொள்வோர், இரவு நேரம் வேலை முடித்து வீடு திரும்புவோர், ரயில்களில் இருந்து இறங்கி வீடுகளுக்கு செல்வோர், பள்ளி முடிந்து வீடு திரும்பும் மாணவர்கள், முதியோர் என தெரு நாய்கள் பயமுறுத்தாதவர்கள் பாக்கி இல்லை.காரைக்கால் மாவட்டத்தில் நாய்கடியால் அதிகபட்சமாக காரைக்கால் நகர பகுதி மற்றும் திருநள்ளாறு தொகுதியில் இருந்து நாள்தோறும் 50 க்கும் மேற்பட்ட நாய்கடியால் பாதிக்கப்பட்டு தேனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும்,காரைக்கால் அரசு பொது தலைமை மருத்துவமணியிலும் முதலுதவி சிகிச்சை பெற்றும்,வீரியம் அதிகமாக இருப்பின் உள்நோயாளியாக தொடர் சிகிச்சையும் பெற்று வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நெடுங்காடு அடுத்த மேலகாசாக்குடி பகுதியில் பைக்கில் சென்ற நபரை 5க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சூழ்ந்து கொண்டு வாகன ஓட்டியின் கால்கள், கைகள் மற்றும் உடல் பகுதிகளில் கடித்து குதறியது. பின்னர் பாதிக்கப்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.மேலும் இதுகுறித்தான புகைப்படங்களில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது.காரைக்கால் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நெருநாய்கள் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 300ஐ நெருங்கி உள்ளது.

நாய்கடி மருந்துகள் போதிய அளவு வைக்க வேண்டும்

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறும்போது, காரைக்கால் முழுவதும் தெரு நாய்கள் தொல்லைதான். எங்கு பார்த்தாலும் இரவு நேரங்களில் கூட்டம், கூட்டமாக நாய்கள் திரிகின்றன. இதனால் இருசக்கர வாகனத்தில் போகும்போது துரத்துவதும் வாடிக்கையாகி விட்டது. இந்த நேரங்களில் சுதாரிக்கவில்லை என்றால் நிச்சயம் விபத்துகளில் சிக்க நேரிடும். திருநள்ளாறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெறிபிடித்த சில நாய்கள் சர்வ சாதரணமாக சாலைகளில் திரிகின்றன. இதுவரை 10-க்கும் மேற்பட்டோரை கடித்துள்ளன. இதுகுறித்து திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளிடமும், சுகாதார ஆய்வாளர்களிடமும் புகார் அளித்தும் பலன் இல்லை.

தற்போது கோடை காலம் என்பதால் நாய்களுக்கு வெறி பிடிக்கும் தன்மை அதிகமாக இருக்கும். கோடைக்கால கடும் வெயிலில் சுற்றித் திரியும் தெரு நாய்களுக்கு வெறிபிடிக்கும். இதனால் நாய்கள் தனது கட்டுக்கோப்பை இழந்து பொதுமக்களை கண்டு எரிச்சலடைவதுடன் கடித்து விடுகின்றனர். இதனை தடுக்க கால்நடை துறை, சுகாதாரத்துறை மற்றும் அணைத்து கொம்யூன் பஞ்சாயத்துக்கள் மற்றும் நகராட்சி ஒன்றிணைத்து தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து தகுந்த சிகிச்சை தருவதுடன் ககருத்தடை முறைகளை மேற்கொள்ள வழிவகை செய்ய வேண்டும். நாய்கடியால் பாதுகாப்பிடுவோரின் எண்ணிக்கை அதிகமாவதால் நாய்க்கடி மருந்துகள் போதிய அளவில் சுகாதார நிலையங்களில் கையிருப்பு வைத்துக் கொள்ளவேண்டும் என்றனர்.

உடனடி நடவடிக்கை தேவை

காரைக்கால் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ நாஜிம் மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பல்வேறு குடியிருப்புகளில் பாம்புகள் வீடுகளுக்குள் புகும் அபாயம் அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட விஷப்பாம்பு களிடமிருந்து பொதுமக்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகம் வனத்துறை மூலம் உதவிட டோல் ப்ரீ எண் ஒன்றை அறிவித்து அந்த எண் மூலம் நேரடியாக வனத்துறை தொடர்பு கொள்ள ஏற்பாடுகள் செய்வதோடு விஷப்பாம்புகளை பிடிக்கக்கூடிய நபர்களையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

அதேபோல் வெயில் அதிகரிப்பால் தெரு நாய்கள் தொல்லைகளும் அதிகரித்து வருகின்றன, அவைகளில் சில வெறி நாய்கள் என்றும் சொல்லப்படுகிறது. எனவே இந்த இரண்டு பிரச்சினைகளாலும் எந்தவித அசம்பாவிதமும் மக்களுக்கு ஏற்படும் முன்பு மாவட்ட நிர்வாகம் உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுத்து மக்களை பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

The post காரைக்காலில் தெருக்களில் சுற்றி திரியும் நாய்கள் நாய் கடியால் ஓராண்டில் 1000 பேர் சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : Karaikal ,World Health Organization ,India ,Indian Health and Family Welfare ,
× RELATED இந்தியாவில் 20 கோடி மக்களுக்கு உயர் ரத்த அழுத்தம்: ஐசிஎம்ஆர் ஆய்வில் தகவல்